ஓபிஎஸ், சசிகலா அணி ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்: மு.க.ஸ்டாலின்
ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் ஒரே குட்டையில் அதுவும்- ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அவர்கள் போடக்கூடிய வேடங்களை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆர்.கே.நகர் தொகுதி வணிகர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மணல் மாஃபியா அணியும், ஃபெரா மாஃபியா அணியும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது இரட்டை இலை சின்னம் யாருக்கு? அந்தக் கட்சி யாருக்கு? என்ற போட்டியில் தானே தவிர மக்களுக்காக இல்லை என குற்றம்சாட்டினார்.
சசிகலா தலைமையில் உள்ள அணி சார்பாக வேட்பாளராக நிற்கும் தினகரன் மீது ஃபெரா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் அதுகுறித்து அதிகம் பேச விரும்பவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
அடுத்து, ஓபிஎஸ்ஸுக்கு நெருங்கிய நண்பர் சேகர் ரெட்டி என தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவரோ மணல் கொள்ளையில் மிகவும் பிரபலமானவர் என தெரிவித்தார். எனவே அதிமுகவின் இரு அணிகளும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதற்காக தானே தவிர மக்களுக்காக இல்லை என கூறினார்.