ஜல்லிக்கட்டுக்காக போராடுகின்ற மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதும், அவர்களுக்குச் செல்லும் உணவு, குடிநீரை தடுத்ததும், தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சி நடப்பதை எடுத்துக் காட்டுவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 21 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய போராடியவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் கைது செய்தது ‘அதிகாலை அராஜகம்’ எனச் சாடியுள்ளார். இது தமிழக இளைஞர்களின் உரிமைக்குரல் மீதும், தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜல்லிக்கட்டிற்காக போராடியவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அலங்காநல்லூர் மக்களைக் கூட தடுத்தது மனித நேயமற்ற செயல் எனவும் அவர் சாடியுள்ளார். விலங்குகள் வதையைத் தடுக்கிறோம் என்று கூறி அலங்காநல்லூர் மக்களுக்கும், அங்கு போராடிய இளைஞர்களுக்கும் காவல்துறை செய்த “வதை” மிக மோசமானது என ஸ்டாலின்குற்றஞ்சாட்டியுள்ளார். விலங்குகள் வதைக்கு குறைந்தபட்ச தண்டனை 10 ரூபாயும், அதிகபட்சமாக 50 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ஆனால் இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காக போராடுகின்ற இளைஞர்களை கொடுங்குற்றம் புரிந்தவர்கள் போல் சித்தரித்து குண்டுக்கட்டாக கைது செய்ததுதும், தடியடி நடத்தியதும், அவர்களின் பசிக்குச் செல்லும் உணவு, குடிநீரை தடுத்ததும் தமிழர்களின் கலாச்சார பெருமையை தடுக்கும் எனவும் கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நடப்பதை எடுத்துக் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், அங்கு மக்களை சுற்றி வளைத்திருக்கும் காவல்துறையினரை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.