“ நீங்கள் பிரதமரானதில் மகிழ்ச்சி”- மோடிக்கு மு.க.அழகிரி வாழ்த்து
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 300-க்கும் அதிகமான இடங்களை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜக ஒரு இடங்களில் கூட பெற்றி பெறவில்லை. தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் 37 இடங்களில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சி அமைக்கும் பிரதமர் மோடிக்கு, கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ மக்களவைத் தேர்தலில் நீங்கள் பெற்ற மகத்தான வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் மறுபடியும் பிரதமராவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
நாட்டின் வளர்ச்சிக்காக நீங்கள் அளித்த வாக்குறுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். உங்களின் எதிர்கால பணி சிறக்க வாழ்த்துவதோடு, அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்படுவீர்கள் என நம்புவதாகவும் மு.க.அழகிரி தனது வாழ்த்து கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் மகனும், மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

