பள்ளிக்கு சென்றபோது காணாமல் போன மாணவர்கள் மீட்பு..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போன இரண்டு மாணவர்களை, மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே காவல்துறையினர் மீட்டனர்.
ஏகாம்பரம் என்பவரின் மகன் விக்னேஷ், ராஜா என்பவரின் மகன் தருண் ஆகிய இருவரும் தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை இருவரையும் அழைக்க பெற்றோர் பள்ளிக்கூடத்திற்கு சென்ற போது இருவரும் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல்துறையினருக்கும் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையினரின் தீவிர தேடுதலை அடுத்து, மாணவர்கள் இருவரும் மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே மீட்கப்பட்டனர். அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை வேனில் கடத்தியதாகவும், மன்னார்குடியில் இறக்கி விட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். யார், எதற்காக கடத்தினார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.