நினைவிழந்த நிலையில் காணாமல் போன முதியவர்: இறந்த பின் மகனிடம் ஒப்படைப்பு
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நினைவு தப்பிய நிலையில் மல்ல சமுத்திரம் பகுதியில் மீட்கப்பட்ட முதியவர் ஒருவர் தன்னார்வ மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், முதுமை காரணமாக நேற்று உயிரிழந்தார். உயிரிழந்த பின்னர் அவர் யார் என்பதை கண்டறியப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி நினைவு தப்பிய நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் போலீஸாரால் முதியவர் ஒருவர் மீட்கப்பட்டார். அவரது பெயர் கிருஷ்ணமாச்சாரி என்பது உள்ளிட்ட ஒரு சில விவரங்களை தவிர மற்ற விவரங்களை அவரால் கூற முடியவில்லை.
கடந்த 9 மாதங்களாக பராமரிக்கும் கரங்கள் என்ற சேவை அமைப்பின் பராமரிப்பில் இருந்து வந்த முதியவர் நேற்று முதுமை காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு சேலம் பகுதியில் விசாரித்தபோது அம்மாபேட்டை பகுதியில் அவர் காணாமல் போனதற்கான காவல் நிலைய வழக்குப்பதிவு இருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை அவரது மகன் அனந்தராமனிடம் அவரது உடல் திருச்செங்கோடு சாந்திவனம் மயானத்தில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.