காணாமல்போன குழந்தை 'லாக்டவுன்' - மீட்கப்பட்டது எப்படி?
அம்பத்தூரில் காணாமல் போன கைக்குழந்தை இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் காந்திநகர், தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில வடமாநிலத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர், புத்தினி தம்பதியின் ஒன்றரை வயது லாக் டவுன் என்ற ஆண் குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் காணமல் போனது. இதுகுறித்து குழந்தையின் தந்தை கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் உதவி ஆணையர் கனகராஜ் தலைமையில் அம்பத்தூர் தனிப்படை போலீசார், குழந்தை யாராவது கடத்தி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முக்கிய ரயில் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்கள். ஆனால், குழந்தை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சேலம் செல்லும் பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தின் நடத்துனர் கோவிந்த ராமானுஜம் என்பவர் பேருந்தில் ஏறி விளக்குகள் ஸ்விட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது பேருந்தின் பின் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து குழந்தையை கைப்பற்றிய கோயம்பேடு போலீசார், அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தையின் போட்டோவை வைத்து பார்த்ததில் தேடப்பட்டு வந்த குழந்தை லாக்டவுன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.