"அதிமுக அமைச்சர்கள் நிதானம் காட்டவேண்டும்!" - பாஜக துணைப் பொறுப்பாளர்
அதிமுக-பாஜக கூட்டணி பற்றி தமிழக அமைச்சர்கள் நிதானமாக கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். திமுகவின் சதி வலையில் விழக்கூடாது என்று தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி கூறினார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் சமீப காலங்களில் சில சலசலப்புகள் காணப்படுகின்றன. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை பாஜக தீர்க்கமாக ஆதரிக்கவில்லை என்பது பல பாஜக தலைவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது.
இதுபற்றி தமிழக பாஜகவின் இணை பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில், “அதிமுக அமைச்சர்கள் திமுகவின் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த சில வாரங்களாக மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமான அதிமுக அமைச்சர்களின் பேச்சுக்களை நான் பார்த்து வருகிறேன். அமைச்சர்களுக்கு எனது வேண்டுகோள்... அவர்கள் பேசும்போதும் கருத்துகளை வெளியிடும்போதும் நிதானம் காட்ட வேண்டும். அதிமுக மற்றும் பாஜகவைத் தாக்கும் திமுகவை அவர்கள் எதிர்க்க வேண்டும். திமுகவின் சதி வலையில் விழக்கூடாது. தேர்தல் தொடர்பான எந்த முடிவை எடுக்க வேண்டுமானாலும், அது நமது நாடாளுமன்ற குழுவால் எடுக்கப்படும்” எனக் கூறினார்
மேலும் “இயல்பாகவே, இது அவர்களின் கட்சி [அதிமுக], அவர்கள் தங்கள் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க முடியும். அவர்கள் தமிழக மக்களுக்காக செய்த நல்ல காரியங்களைப் பற்றி பேச வேண்டும். மத்திய அரசிலிருந்து கூடுதல் நிதி வருகிறது. இதனால் தமிழகத்தின் 12,000 கிராமங்கள் பயனடைகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்துகிறது. இன்று ஓசூரில் நடந்த எங்கள் மோர்ச்சா கூட்டத்தின் தீர்மானத்தின்படி, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை அனைத்து பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வைக்குமாறு மாநில அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அவர்கள் ஒரு என்.டி.ஏ கூட்டாளர் என்பதால் அதுவே நெறிமுறை. கூட்டணி தொடர்பான பிரச்னைகள் குறித்து இதுவரை முறையான கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை; அது பின்னர் விவாதிக்கப்படும். நேரம் இன்னும் இருக்கிறது” எனக் கூறினார்
அதிமுக கூட்டணி தொடர்பாக பேசிய சுதாகர் ரெட்டி, “அதிமுக எங்கள் என்.டி.ஏ கூட்டாளி என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது என்று ஏற்கெனவே கூறியுள்ளனர். முதல்வர் வேட்பாளர் என்பது ஒரு தொழில்நுட்ப விஷயம். தேர்தல் அறிவிப்பு வரும்போதுதான் அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்
ரஜினிகாந்தை கூட்டணியில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, “முதலாவதாக, அவர் விரைவாக குணமடைய விரும்புகிறேன். நிலைமையைப் பார்ப்போம். என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ரஜினிகாந்தின் குறிக்கோள் என்ன? அவர் என்ன செய்வார்? [எங்களுக்குத் தெரியாது]. இதுபற்றிய வாய்ப்பு ஏற்பட்டால் எங்கள் நாடாளுமன்ற குழு அழைப்பு விடுக்கும்” என கூறினார்.
பாஜக தலைவர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிப்பது தொடர்பாக பேசிய அவர் “எங்கள் தலைவர்கள் அனைவரும் முதிர்ச்சியுள்ளவர்கள். அவர்களுக்கு என்ன பேச வேண்டும், என்ன பேசக்கூடாது என்பது தெரியும். எல்லாவற்றையும் உயர் மட்டக்குழு, பொருத்தமான மன்றத்தில் பரிசீலிக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்” என கூறினார்