சென்னையில் 15 நாட்களில் டெங்கு கட்டுப்படுத்தப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
23 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் டெங்கு காய்ச்சல் கண்டறியும் நவீன கருவிகள் வழங்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் அடுத்த மாதம் 17 ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுவதையடுத்து இடம் தேர்வு செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு மன்னர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளோடு ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகம் முழுவதும் டெங்கு உள்ளிட்ட அனைத்து விதமான காய்ச்சலையும் கட்டுப்படுத்தவும், எந்த வகையான காய்ச்சல் என்பதை கண்டறிவதற்கும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செல்கவுண்டர் எனப்படும் உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கையை கண்டுபிடிக்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ரூ.23.50 கோடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்பேரில் 837 செல் கவுண்டர்கள் வழங்கப்பட உள்ளது. தற்போது, சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 75 செல் கவுண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு 10, 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதே என்ற கேள்விக்கு, பொதுவாக பருவமழை காலகட்டத்தில் இயல்பாகவே காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டு அதனை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் 12 சுகாதார மாவட்டங்களில் காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு குறைந்துள்ளது என தெரிவித்தார். மேலும், கன்னியாகுமரி, ஈரோடு, திண்டுக்கல், நாமக்கல், பழனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காய்ச்சலின் தாக்கம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், சென்னையில் 15 நாட்களுக்கு முழுமையாக கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.