“எனக்கு சால்வை வேண்டாம்; பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்” - அமைச்சர் விஜயபாஸ்கர் 

 “எனக்கு சால்வை வேண்டாம்; பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்” - அமைச்சர் விஜயபாஸ்கர் 
 “எனக்கு சால்வை வேண்டாம்; பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுங்கள்” - அமைச்சர் விஜயபாஸ்கர் 

தனக்கு சால்வை அணிவிக்க விரும்பும் கட்சியினர் அதனை தவிர்த்து அதற்கு பதிலாக பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 5 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் மனுநீதி முகாம்களில் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

இந்த மனுநீதி முகாம்களில் பங்கேற்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அவரது ஆதரவாளர்களும், அதிமுகவினரும் அதிக அளவில் வந்து சால்வை, மற்றும் துண்டுகளை அணிவிக்கின்றனர். இதனால் ஒவ்வொரு இடங்களிலும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை மக்களிடம் மனுக்களை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதனை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரம்பூரில் நடந்த மனுநீதி முகாமின்போது தனக்கு சால்வை அணிவிக்க வந்தவர்களை தடுத்து இனிமேல் தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக மனு எழுத முடியாமல் சிரமப்படும் இரண்டு பொதுமக்களுக்கு மனு எழுதிக் கொடுங்கள் என்று வேண்டுகள் விடுத்தார். ஆனால் அதனையும் மீறி அவர் பேசி முடிப்பதற்குள்ளாகவே 5ற்கும் மேற்பட்டோர் அவருக்கு சால்வை அணிவித்ததால் அவர் முகம் சுழித்தார்.

தொடர்ந்து முதியவர் ஒருவர் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திருநீறு பூசிவிட்டு சென்றார். அப்போது அவரைப் பார்த்து அமைச்சர் விஜயபாஸ்கர் ‘நீங்கள் கட்டியிருக்கும் வேட்டியின் கரை காங்கிரஸ் ஆக இருந்தாலும் மறக்காமல் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விடுங்கள்’ என அரசு விழாவில் மைக்கில் கூறியதால் கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com