மழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோம் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் அதனால் நமக்கு மட்டுமின்றி, அடுத்த தலைமுறைக்கும் விளையும் பயன்கள் குறித்தும் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் பெய்த மழையில் எத்தனை சதவிகித நீரை நாம் சேமிட்து வைத்திருக்கிறோம்? அரசு தொடர்ந்து தன் கடமையை செய்து கொண்டுதான் வருகிறது. ஆனால் மழை நீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழை நீரை சேமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். இதை கருத்தில் கொண்டு தமிழக மக்கள் அனைவரும் வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்பது என்று உறுதி கொள்வோமாக” எனத் தெரிவித்துள்ளார்.