மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையே காரணம் - அமைச்சர் வேலு

மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையே காரணம் - அமைச்சர் வேலு
மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்துக்கு ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையே காரணம் - அமைச்சர் வேலு
விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, ஒப்பந்ததாரரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் எனத் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து நத்தம் வரை 44 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் இருந்து செட்டிக்குளம் வரை 7.3 கிலோ மீட்டா் தூரம் ரூ.670 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பறக்கும் பாலத்திற்காக அமைக்கப்படும் தூண்களுக்கு இடையே, பாலத்தின் மேல் பகுதி, இணைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இரு தூண்களுக்கு இடையே பாலத்தின் மேல் பகுதியை ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் இணைக்கும் பணி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் கோளாறு ஏற்பட்டு பாலத்தின் மேல் பகுதி கீழே விழுந்து நொறுங்கியது. அங்கு பணியாற்றிய உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த ஆகாஷ் சிங் என்பவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் பாலத்தின் அடியில் சிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக, பணிகளை மேற்கொள்ளும் நிறுவன திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ''மதுரையில் நகர்ப் பகுதியிலிருந்து நத்தம் சாலையை இணைக்கின்ற இந்த பறக்கும் சாலை மேம்பாலத்தின் நீளம் 7.5 கிலோ மீட்டர். இதில் 5.9. கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் அணுகுசாலை பகுதிதான் தற்போது விபத்துக்குள்ளான பகுதி. இந்த விபத்து தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இந்த விபத்து ஒப்பந்ததாரரின் அஜாக்கிரதையால் நடைபெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.545 கோடி. மும்பையைச் சேர்ந்த ஜேஎம்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு 3 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடைய வேண்டும். இப்பணியை பொறுத்தவரையில் இது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் நடக்கும் பணி அல்ல. இது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் பணிகள் நடைபெறுகிறது'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com