'திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசும் ஒரு கும்பல் இங்குள்ளது' - அமைச்சர் உதயநிதி பேச்சு

'திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசும் ஒரு கும்பல் இங்குள்ளது' - அமைச்சர் உதயநிதி பேச்சு
'திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசும் ஒரு கும்பல் இங்குள்ளது' - அமைச்சர் உதயநிதி பேச்சு

“வாட்ஸ்அப் மூலம் கருத்துகளை திரித்து கூறும் சமூகத்தால் திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசக்கூடிய ஒரு கும்பல் இங்குள்ளது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என நாமக்கல்லில் நடைபெற்ற நாமக்கல் கவிஞர் சிலை திறப்பு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசினார். 

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் 7 லட்ச ரூபாய் மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மார்பளவு வெண்கல சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு புதிய சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.ராஜேஸ்குமார், ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, “இராமலிங்கம் கவிஞர் என்று சொல்வதை விட நாமக்கல் கவிஞர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் எளிதில் விளங்கும். ‘தமிழன் என்று சொல்லடா... தலைநிமிர்ந்து நில்லடா’ என்று சொன்ன நாமக்கல் கவிஞரின் வரிகளை இன்று செயல்படுத்தி வருபவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். இதுதான் திராவிடல் மாடல் ஆட்சி. புதுமைபெண் திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின். உலகத்திலே படிக்கும் மாணச்செல்வங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். புதிய கல்வி கொளகையில் 3-வது மொழியாக ஹிந்தியை திணிக்க பார்க்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கையை உருவாக்கி வருகிறார்” என பேசினார்..

இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், “நாமக்கல்லுக்கே அடையாளமாக நாமக்கல் கவிஞர், இன்று ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கே அடையாளமாக விளங்கி வருகிறார். வரலாற்றையே வாட்ஸ் அப் மூலம் திரித்து கூறும் சமூகம், திருவள்ளுவருக்கே காவி சாயம் பூசக்கூடிய ஒரு சமூகம் இங்குள்ளது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற இங்கே ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டுள்ளது. அதை நாம் ஒன்றிணைந்து முறியடிப்போம்.

பெண்களுக்கு சொத்தில் சம பங்கு என்ற சட்டம் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களிலும் இதை அமல்படுத்துகிறது. ஆனால் தலைவர் கலைஞர் நாட்டிற்கு முன்னோடியாக விளங்கினார். மகளிர் இலவச பேருந்து திட்டத்தின் கீழ் 250 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com