“ஆளுநர் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவில்லை” - அமைச்சர் உதயநிதி

“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப் போராட்டம் தான் ஒரே தீர்வு. இல்லையென்றால் எல்லோரும் தெருவுக்கு வந்து போராட வேண்டியதுதான். அப்படி போராடினால் திமுக மாணவர்கள் பக்கம் நிற்கும்” - அமைச்சர் உதயநிதி

2 ஆவது முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் நேற்றைய தினம் உயிரை மாய்த்து கொண்டிருந்தார் மாணவரொருவர். அவரின் தந்தையும் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்கள் குறித்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி - ஆளுநர் ஆர்.என்.ரவி
அமைச்சர் உதயநிதி - ஆளுநர் ஆர்.என்.ரவி

அவர் பேசுகையில், “தொடர்ந்து பல்வேறு மாணவச் செல்வங்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆரம்பத்தில் இருந்தே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். தனது மருத்துவ கனவு பறிபோனதால் சகோதரர் ஜெகதீஷ்வரன் தற்கொலை செய்து கொண்டார். இதுவரை மாணவர்களைதான் பறிகொடுத்து இருந்தோம் தற்போது மாணவச் செல்வங்களைச் சேர்ந்த குடும்பங்களையும் பறிகொடுத்து கொண்டிருக்கிறோம்.

“மாணவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்”

செல்வசேகரன் (மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை) குடும்பத்தை சந்தித்து ஆறுதல் சொல்லும் அளவிற்கு எனக்கு தெம்பு கிடையாது. வருடம், வருடம் இந்த நீட் தேர்வால் மாணவர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். நான் அரசியல் பேச விரும்பவில்லை. இருந்தாலும் ஒன்றிய அரசு தயவுசெய்து தமிழ்நாடு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு முறை சட்டசபையில் மசோதா நிறைவேற்றி அனுப்பியுள்ளோம். ஒரு முறை ஆளுநர் திருப்பி அனுப்பி விட்டார். மறுமுறை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

இறந்த மாணவர் - அவரின் தந்தை
இறந்த மாணவர் - அவரின் தந்தை

அதுவும் முதல்வர் கொடுத்த அழுத்தத்தின் பேரில் வேறு வழி இல்லாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். குடியரசு தலைவர் விரைவில் அதற்கு ஒரு முடிவை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் வேண்டுகோள் வைத்துள்ளார். தயவு செய்து யாரும் இந்த தற்கொலை முடிவை எடுக்காதீர்கள்.

அமைச்சர் உதயநிதி
”மாணவர்களே உயிரை மாய்த்துக்‌ கொள்ளும்‌ சிந்தனை வேண்டாம்‌; நீட் பலிபீடத்தில் இதுவே கடைசி..”- முதல்வர்

“வேறு உலகத்தில் இருக்கிறார் ஆளுநர்”

விரைவில் இவ்விவகாரத்தில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். மீண்டும் ஒன்றிய பாஜக அரசிடம் நான் கேட்டுக் கொள்வது, இந்த நீட் தேர்வுக்கு தயவுசெய்து தமிழ்நாட்டில் விலக்கு கொடுக்க வேண்டும்.

ஆளுநர் பேசும் போதே பலிகொடுத்து இருக்கிறோம். மாணவர்களின் பெற்றோரே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் ஆளுநர் இதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் யார்? வேறு உலகத்தில் இருக்கிறார் அவர். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சுத்தமாக அவர் புரிந்து கொள்ளவில்லை. நான்கு ஐந்து வருடங்களில் 20 உயிர்களை பறிகொடுத்திருக்கிறோம். ஆளுநர் அதை புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் அழுத்தத்தின் பேரில் மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

“சட்டப்போராட்டம்தான் ஒரே தீர்வு”

ஒன்றிய பாஜக அரசு தான் இதற்கு சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆளுநர் ‘நீட் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டோம்’ என்று பேசியதற்கு யாரேனும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? திமுக தானே எதிர்ப்பு தெரிவித்தது! இந்த நேரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை. யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. திமுக நீட் தேர்வு கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறது. நான் பிரதமரை நேரில் சந்திக்கும் பொழுதும் அதை தான் சொன்னேன். அவர் அதற்கு பல்வேறு காரணங்களை கூறினார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றால் சட்டப் போராட்டம்தான் ஒரே தீர்வு. இல்லையென்றால் எல்லோரும் தெருவுக்கு வந்து போராட வேண்டியதுதான். அப்படி போராடினால் திமுக மாணவர்கள் பக்கம் நிற்கும்.

“மாற்றம் வரும்... கொஞ்சம் பொறுமையாக இருங்கள்”

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு கல்வி உரிமை வழங்கப்படும் என்றும், யாருக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவையோ அவர்களுக்கு ஏற்றார் போல செய்து கொடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் இருந்து நீட்டை ரத்து செய்யும். ஆகவே கண்டிப்பாக விரைவில் ஒரு நல்ல மாற்றம் வரும். மாணவர்கள் தயவு செய்து தப்பான முடிவுகளை எடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்....

அமைச்சர் உதயநிதி
“நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன்” - ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்
ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிPT

“ஆளுநருக்கு புரிதல் இல்லை..”

ஆளுநர் புரிதலே இல்லாமல் பேசுகிறார், ஆளுநருக்கு இதில் ரோலே கிடையாது. இனி ஜனாதிபதி தான் முடிவு எடுக்க வேண்டும். ஆளுநர் இங்கு உட்கார்ந்து கொண்டு கோச்சிங் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை கொஞ்சம் கூட அறியாமல் வேறு ஒரு உலகத்தில் ஆளுநர் உள்ளார்.

“அரசியலாக்க விரும்பவில்லை”

இவ்விவகாரத்தில் மாணவரின் குடும்பத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆறுதல் சொல்லக்கூடாதா? எனில் யார் ஆறுதல் கூறுவார்கள்? அதிலும் பெற்றோர்களுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்? நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? அதிமுக ஆட்சியில்தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள். கலைஞர் இருந்தவரை நீட் தேர்வு கிடையாது. ஜெயலலிதா அம்மையார்தான் இருந்தார். இதை அரசியலாக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த மரணத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒன்றிய பாஜக-விடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வது தயவுசெய்து இத்தேர்வில் இருந்து விலக்கு கொடுங்கள்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com