“அரசு பள்ளியில் பயின்ற பலர் சிலிக்கான் வேலியில் உயர் பதவியில் உள்ளனர். உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ் நாட்டில் படித்தவர்கள்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சல் பிடித்துக் கொண்டு நமது பாடத்திட்டத்தை குறை கூறி வருகின்றனர்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா சென்னை வண்டலூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வியில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களையும், அரசுப் பள்ளிகளில் பயின்று சாதனை புரிந்தவர்களையும் குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “மாணவர்களை சுயமாக சிந்திக்க தூண்டுகிற கல்வி முறைதான் சிறந்த கல்வி முறை. அந்தவகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழ்நாட்டு கல்வி முறைதான் மாணவர்களை சிந்திக்க வைக்கின்ற, எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் கல்வி முறையாக அமைந்துள்ளது.
இன்றைக்கு சிலர் நமது தமிழக அரசின் பாடத் திட்டம் சரியில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ளனர். அரசு பள்ளியில் பயின்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, வீர முத்துவேல் போன்றோரும், அரசு பள்ளியில் பயின்ற மேலும் பலரும் ஐடி துறைகளில் உயர்பதவியில் உள்ளனர்.
தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், ஐஐடி, எம்ஐடி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படித்து வருகின்றனர். பாடத்திட்டத்தை குறை கூறுவது நம்முடைய ஆசிரியர்களை, மாணவர்களை குறை கூறுவதற்கு சமம். இதற்கு எந்த விதத்திலும் திராவிட அரசும், நமது முதல்வரும் இடம் கொடுக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே சிறந்த கல்வி திட்டம் தமிழக கல்வி திட்டம்தான்” என பேசினார்.
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் திமுக நிர்வாகி இல்லத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் தமிழ்நாட்டில் படித்தவர்கள்தான். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலர் வயிற்றெரிச்சல் பிடித்துக் கொண்டு, நமது பாடத்திட்டத்தை குறை கூறி வருகின்றனர்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக, கடந்த 1ஆம் தேதி சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அந்நிகழ்வில் பேசிய அவர், “பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுடபத்தை அறிமுகப்படுத்த வேண்டும். மாநில பாடத்திட்டம் தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது மோசமாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் பற்றியான அறிவுத்திறன் குறைவாக உள்ளது” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியின் கருத்துகள் ஆளுநருக்கான பதிலாக பார்க்கப்படுகிறது.