“P.E.T வகுப்புகளை கடன் வாங்காதீர்கள்; உங்க வகுப்புகளை அவங்களுக்கு கடன் கொடுங்கள்!”- அமைச்சர் உதயநிதி

“விளையாட்டு வீரர்கள் எதற்கும் தயாராக, எதற்கும் தயங்காமல் உங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் கோப்பைகான போட்டியில், தஞ்சாவூர் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் கோப்பைகான மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதைத் தொடாந்து அங்க பேசிய அமைச்சர் உதயநிதி, “பல எழுத்தாளர்களையும் அரசியல் தலைவர்களையும் உருவாக்கிய தஞ்சை மண், இனிவரும் காலங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் P.E.T வகுப்புகளை கடன் வாங்காதீர்கள். உங்கள் வகுப்புகளை வேண்டுமென்றால் கடன் வழங்கி மாணவர்களை விளையாட அனுமதியுங்கள். பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு ஒரு வேண்டுகோளாக இதை வைக்கிறேன்.

மாணவர்களே... எதற்கும் தயாராக, எதற்கும் தயங்காமல் உங்கள் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவில், தேசிய அளவில், சர்வதேச அளவில் ஆட்ட களங்கள் காத்திருக்கின்றன” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com