“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..!
நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசனின் நிலைமைதான் வரும் என்று முதலமைச்சர் சொன்னதில் எள்ளளவும் மாற்றம் இல்லை. அதை நான் வழிமொழிகிறேன் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வண்ணமாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் அந்தந்தப் பகுதிகளில் மக்களுக்கான அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “இந்தப் பயணத்தின் மூலமாக எங்களது ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைத்து திமுகவின் பொய்யான குற்றச்சாட்டை தோலுரித்துக் காட்டுவதே எங்களது முதல் கடமை. பிரதமர் மோடியை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்கு அழைத்து வர அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வோம். உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 100% வெற்றி பெறப்போவது உறுதி.
முதலமைச்சர் ஒரு கருத்துச் சொன்னால் அது மிகச் சரியானதாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி கணேசன் நிலைமை என்று சொன்னதில் உண்மை உள்ளது. அதை நான் வழிமொழிகிறேன்” எனத் தெரிவித்தார்.