
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து நாடுமுழுவதும் விவாதப் பொருளாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்களோ உதயநிதியின் பேச்சிற்கு மாறி மாறி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல் வீரர் கூட்டமானது, தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசையா புரத்தில் நடைபெற்றது. சமூக நலம், பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், “நீட் கொண்டு வந்தது எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதா இருந்தவரை நீட் தமிழகத்திற்கு வரவில்லை.. தமிழகத்திலிருந்து நுழைவு தேர்வு ரத்து செய்தது டாக்டர் கலைஞர். கிராமப்புறங்களில் ஏழை மாணவர்கள் படித்து மருத்துவராக வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் பாஜகவிற்கு பயந்து குறுக்கு வழியில் திணிக்கப்பட்டது.
இதுவரைக்கும் 21 குழந்தைகள் இறந்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய முழு முயற்சியை திமுக செய்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் முழுவதாக என்றைக்கு ரத்து செய்கிறோமோ அதுதான் முழு வெற்றி. அடுத்த போராட்ட களத்திற்கு தயாராக வேண்டும். அடுத்த போராட்டம் டெல்லியில் இருக்கும்.
இந்தியாவே என்னைப்பற்றி தான் பேசிக் கொண்டே இருக்கிறது. சனாதான ஒழிப்பு மாநாட்டில், சனாதானத்தை ஒழிக்க வேண்டும். எப்படி கொசு மலேரியா டெங்கு காலரா கோவிட்டை ஒழித்தோமோ அதேபோல ஒழிக்க வேண்டும் என்று கூறினேன். மத்திய அமைச்சர்கள் வரைக்கும் உதயநிதி பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா முழுக்க புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.
என்னை கைது செய்ய வேண்டும் என்று இன்றைக்கு ஒரு சாமியார் என்னுடைய தலைக்கு விலை வைத்திருக்கின்றார், 10 கோடி. உதயநிதி தலையை யார் எடுத்துட்டு வருகிறார்களோ அவர்களுக்கு 10 கோடி என்று ஒரு சாமியார் சொல்கிறார். என் தலை மேல் உனக்கு அப்படி என்ன ஆசை. நீ ஒரு சாமியார் உனக்கு எப்படி பத்து கோடி. நீ உண்மையான சாமியாரா இல்ல டூப்ளிகேட் சாமியாரா? பத்து ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி விட்டு போயிடுவேன். இதேபோல் கலைஞரையும் தலையை சீவினால் ஒரு கோடி ரூபாய் தருவேன் என்றார். என் தலையை நானே சீவிக்க முடியாது என்று கலைஞர் பதில் கொடுத்தார்” என்று பேசியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, “சனாதனமும் இந்து மதமும் வாழைப்பழம் போன்றது. வாழைப்பழம் என்பது இந்து மதம் என்றால் சனாதனம் என்பது வாழைப்பழத்தின் மீது உள்ள தோலை போன்றது. தோலை நீக்கி தான் பழம் சாப்பிட இயலும். அதேபோல் சனாதனத்தில் தேவையில்லாத பகுதிகளை எதிர்ப்பது எங்களது கொள்கை. முழுவதுமாக எதிர்ப்பது எங்களது கொள்கை அல்ல.
விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எங்களைப் பொறுத்த வரையிலே சனாதனத்தின் கோட்பாடுகளின் நாங்களை எதிர்க்கிறோம். சனாதன கோட்பாடுகளை மட்டும்தான் அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறோமே தவிர, சனாதனத்தை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என நாங்கள் தெரிவிக்கவில்லை” என்றார்.