“100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது” - அமைச்சர் தங்கமணி
100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் ரத்து செய்யப்படாது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதுப்பிக்கதக்க மின்சார உற்பத்தி மேலாண்மை மையத்தை சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். கார்பன் உற்பத்தியை அதிகரிக்கும் அனல் மின்சாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் 49 கோடி ரூபாயை செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை முன்கூட்டியே கணித்து அனல் மின்சாரத்தின் பயன்பாட்டை குறைக்கும் அளவிற்கு உதவி செய்யும். இந்தியாவின் வட பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் இதே போன்ற மையங்கள் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
அதனையடுத்து தமிழகத்திலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்த பிறகு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். புதுப்பிக்கத்தக்க மின்சாரம் எந்த அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை கண்காணிக்க மையம் தொடங்கப்பட்டுள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கும் ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் இப்போது மின் கட்டண உயர்வு இருக்காது. கோடைக்காலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்று அவர் கூறினார்.