டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வு : அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இன்று பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி, புதிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாநில வாணிபக்கழக சில்லறை விற்பனைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் இரண்டாயிரம் ரூபாய் கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.
இந்த ஊதிய உயர்வு, 2019 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் நிறுவனத்தின் ஏழாயிரத்து 74 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 435 விற்பனையாளர்கள் மற்றும் மூவாயிரத்து 547 உதவி விற்பனையாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார். இதற்காக ஆண்டுக்கு கூடுதலாக 62 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.