திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு : தங்கம் தென்னரசு விளக்கம்

திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு : தங்கம் தென்னரசு விளக்கம்

திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு : தங்கம் தென்னரசு விளக்கம்
Published on

சங்கத் தமிழ் நூல் தொகுப்பிற்கு திராவிடக் களஞ்சியம் என பெயர் சூட்டுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், இரண்டும் வேறுவேறு என தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூல் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், சங்கத் தமிழ் நூல்கள் எதிலும் திராவிட என்ற சொல்லே கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இன உணர்வும், தமிழ்த் தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ் -தமிழினப் பெருமிதங்களை திராவிட மாயையில் மறைக்கும் செயலை திமுக கைவிட்டால் நல்லது எனவும் வலியுறுத்தியுள்ளார். திராவிடக் களஞ்சியம் என்பதற்கு பதில் தமிழ்க் களஞ்சியம் என்றே குறிப்பிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தெரிவித்துள்ளார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சங்க இலக்கியத் தொகுப்பு என்பது வேறு, திராவிடக் களஞ்சியத் தொகுப்பு என்பது வேறு என தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ''சரியாக புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட விளைவு தான் இது. சங்க இலக்கியங்களை சந்தி பிரித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வகையில் சங்க இலக்கிய தொகுப்பு உருவாக்கி தரப்படும். இது ஒன்று. அதேபோல மற்றொன்று, திராவிட களஞ்சியத்தை உருவாக்குவது. திராவிடத்தின் கொள்கைளை உருவாக்குவது. உதாரணமாக, மாநில சுயாட்சி, இருமொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என பல கொள்கைகளை திராவிடம் முன்னெடுத்துள்ளது. இது குறித்து திராவிட இயக்கத்தின் ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பை உருவாக்குவது தான் திராவிட களஞ்சியம். எனவே இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

திராவிடக் களஞ்சியம் தொகுப்பு நூல் விவகாரத்தில் மக்களை குழப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கும் சிலரது முயற்சி பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com