பருவமழையை எதிர்கொள்ள அமைச்சர் தலைமையில் ஆலோசனை
வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் மழை பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் உட்பட வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், மழையின் பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட கட்டுப்பாட்டு மையங்கள் தயாரான நிலையில் இருப்பதாகவும், மழை பாதித்த பகுதிகளில் உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.