“பழனி கோயில் கோபுர சிலை சேதமடைந்ததற்கு ஊழல் காரணமில்லை” - H.ராஜாவுக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
சென்னை மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் மண்டபத்தில், நவராத்திரி விழாவிற்காக அறநிலையத்துறை சார்பில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பழனி கோயில் கோபுர சேதம் தொடர்பான, H.ராஜாவின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சேகர் பாபு, “கோயிலில் உபயதாரர்களே புனரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். கோயில் சார்பில் புனரமைப்பு பணி செய்யப்படவில்லை. ஆகஸ்ட் மாத மழையின் காரணமாகவே சிறிய சிற்பம் சேதமடைந்தது. அது வரும் 24 ஆம் தேதி சீரமைப்பு செய்யப்படும்.
கோயில் கோபுரத்தை புனரமைப்பு செய்தது யார் என்றே தெரியாமல் ஹெ.ராஜா பேசியுள்ளார். பாஜக ஆட்சியில் கட்டப்பட்ட ராமர் கோயிலில்தான் மழைநீர் ஒழுகியது; நாடாளுமன்ற வளாகத்திலும் தண்ணீர் ஒழுகியது; சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை” என்றார்.