அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு Open Heart அறுவை சிகிச்சை முடிந்தது - தற்போது எப்படி உள்ளார்?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக நடைபெற்ற இதய அறுவை சிகிச்சை நிறைவுப் பெற்றதையடுத்து ஒரு வாரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு நெஞ்சுவலி என கூறியதால் செந்தில் பாலாஜி முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில் பாலாஜி, வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் 90 சதவீதம் பாதிப்போடு செயல்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் இதய அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த 15ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த அமைச்சருக்கு, எலக்ட்ரோ கார்டியோகிராம், மார்பு எக்ஸ்ரே, இரத்த பரிசோதனைகள், கரோடிட் அல்ட்ராசவுண்ட் மற்றும் நரம்பு மேப்பிங் போன்ற வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்குமா என்பதை உறுதி செய்தனர். பொதுசுகாதாரத்துறை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்று அதிகாலை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. இதய அறுவை சிகிச்சை இன்று நடைபெறுவதால் நேற்றிலிருந்து அமைச்சருடைய உடல்நிலை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று காலை 4:30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு மாற்றப்பட்டார். மயக்க மருந்து முதலில் கொடுக்கப்பட்ட பின்னர் இதயவியல் நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் செந்தில் பாலாஜிக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்தனர். அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. சரியாக பத்து மணி அளவில் அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்ததாக மருத்துவத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மூத்த இதயவியல் நிபுணர் ரகுராம் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை அறிக்கை
காவேரி மருத்துவமனை அறிக்கை@PT Twitter

மருத்துவ கண்காணிப்போடு அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் அமைச்சருக்கு நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், இதய நோய்க்கான தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பல்துறை குழுவால் அமைச்சரின் உடல்நிலை கண்காணிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை கைது செய்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. ஏற்கெனவே இதயக் குழாய்களில் அடைப்பு இருந்த அமைச்சருக்கு நெஞ்சு வலியால் மேலும் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அறுவை சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்த மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவார் என்றும் அதற்கடுத்த 7 நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி சகஜ நிலைக்கு திரும்ப ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com