"இந்த Excel (வாட்ச் பில்) சீட்ட ரெடி பண்ணவா இத்தன மாசம்?" - அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜியின் பதிலடி

4 ஆடு மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்து எப்படி குடியிருக்க முடியும்? என காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
செந்தில் பாலாஜி - அண்ணாமலை
செந்தில் பாலாஜி - அண்ணாமலைPT

திமுகவின் பத்துக்கும் மேற்பட்டோரின் சொத்துவிவரங்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டு ஊழல் பட்டியல் என குறிப்பிட்ட நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவருக்கு பதிலளித்து பேட்டியளித்தார். அப்போது, 4 ஆடு மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்து எப்படி குடியிருக்க முடியும்? என காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்தநிலையில், இன்று சென்னைக் கமலாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டோரின் சொத்து விவரங்களை வெளியிட்டார். தமிழகத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் வெளியிடப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது வெளியிட்டுள்ள முதல் பாகத்தில், திமுகவினரின் நேரடியான குடும்பச் சொத்துகள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து திமுகவுக்குச் சொந்தமாக 1,408 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகக் கூறியது பற்றி, அண்ணாமலை 15 நாட்களில் விவரங்களைத் தர வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ்.பாரதி எதிர்வினை ஆற்றியுள்ளார். மேலும், அண்ணாமலை குற்றம் சுமத்தியுள்ள 17 பேரும், தேர்தலுக்கு முன் தங்கள் சொத்து விவரங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசுகையில், “ஒரு அரசின்மீது, அமைச்சர்கள்மீது சொல்லப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் என்ன முகாந்தரம் இருந்தது? ஏதாவது ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த நபர் குடியிருக்கும் வீட்டின் வாடகை 3.75 லட்சம் ரூபாய். இந்த வாடகை யார் கொடுக்கிறார்கள்? காருக்கு யார் டீசல் அடிக்கிறார்கள்? சம்பளம் யார் கொடுக்கிறார்? 3.75 லட்சம் வாடகை கொடுக்கும் வீட்டுக்கு 3 உதவியாளர் இருந்தால் போதுமா? அந்த வீட்டை பராமரிக்கு எவ்வளவு பேர் வேலைக்கு தேவைப்படுவர்? அவர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்கள்?

அப்படியென்றால் 4 ஆடு மேய்த்தால் 3.75 லட்சம் வாடகை கொடுத்து குடியிருக்க முடியும். அப்படித்தானே? அவர் சொல்லக்கூடிய கருத்துகள் அப்படித்தான் இருக்கின்றன. தூய்மையானவராக இருந்தால் ஏன் அடுத்தவர் சொத்தில் வாழ்கிறார்? அவரது மனைவி அவரைவிட பல மடங்கு சம்பாதிக்கிறார் என்று கூறும் அவர், மாப்பிள்ளை இவர்தான் என்ற படையப்பா வசனம் போல, பயன்படுத்துகிறது எல்லாம் நான்தான்; ஆனால், கொடுப்பதெல்லாம் அவர் என்கிறதுபோல் பேசுகிறார்.

சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கவேண்டும். அப்போதுதான் அது சரியா தவறா என தெரியும். ஒரு நபருடைய கோமாளித்தனத்துக்கு என்னிடம் பதில் கேட்கிறீர்கள். அவருடைய கடிகார பில்லும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை” என்று சாடினார்.

செந்தில் பாலாஜி பேசியதன் முழுவிபரத்தை அறிய இந்த காணொளியை காணவும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com