‘மாதாந்திர மின் கணக்கீடு முறை எப்போது தொடங்கப்படும்?’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

‘மாதாந்திர மின் கணக்கீடு முறை எப்போது தொடங்கப்படும்?’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!
‘மாதாந்திர மின் கணக்கீடு முறை எப்போது தொடங்கப்படும்?’ -அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்!

மாதாந்திர மின் கணக்கீடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடுவீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதல்வர் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வழங்கிய சாதனை திட்டங்களின் சான்றாக கை சின்னம் மகத்தான வெற்றி பெறும்.

கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை என மக்கள் யாரும் சொல்லவில்லை. இது அ.தி.மு.க.வின் கோட்டை கிடையாது. முதல்வரின் எஃகு கோட்டை. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலைப் போடாமல் இருந்துள்ளனர். தேர்தல் முடிந்தப் பிறகு சாலை போடும் பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் அண்ணாமலை கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர் என கேள்வி எழுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருடைய கட்சி மிஸ்டுகால் கட்சி என்றார்.

இல்லாத நபரை இருப்பதாக காட்டி அவரின் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தேர்தல் அவர்களை மையப்படுத்தி நடப்பதாக கருத்தை உருவாக்கவேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் முதல்வர் 85 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்றும், மாதாந்திர மின் கணக்கீடு விரைவில் நிறைவேற்றப்போகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மின் கணக்கு எடுக்கும் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்றுக் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 50 சதவீதம் காலிப்பணியிடங்களாக இருக்கிறது என்றும், ஸ்மார்ட் மீட்டர் போடுவதற்காக டெண்டர் விடக்கூடிய பணிகளை தொடங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். விரைவில் மாதாந்திர மின் கணக்கீடு முதல்வரின் வழிகாட்டுதலின் படி நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அவர், கடந்த பத்து ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தாதது போல் மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகளுக்கான 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 117 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது என்றும், விசைத்தறிக்கு 405 ரூபாய் உயர்த்தியுள்ளனர் எனவும் கூறினார். தேர்தல் வாக்குறுதியான விசைத்தறிக்கான 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட் உயர்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வெற்றி முதல்வரின் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமையும் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com