“நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது” செந்தில்பாலாஜியிடம் கேட்ட அமலாக்கத்துறை?கோர்ட்டில் பகீர் தகவல்
அமலாக்கத்துறை பதிவுசெய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை, சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, கடந்த 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனு மீது அமலாக்கத்துறை பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டதுடன், விசாரணை செப்டம்பர் 15ஆம் தேதிக்கும் தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில், செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் கபில்சிபல், “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின்போது அமலாக்கத் துறை கேட்டது“ என வாதிட்டார். அதற்கு அமலாக்கத்துற தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “அப்படி ஏதும் செந்தில் பாலாஜியிடம் கேட்கவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும்நிலையில் எங்கும் தப்பிச் செல்ல இயலாது. தற்போது இருக்கும் உடல்நிலைபடி 30 நிமிடங்களுக்கமேல் நிற்க முடியாது. எங்கும் தப்பித்து ஓடாமல் விசாரணையை எதிர்கொள்வோம். செந்தில்பாலாஜி அதிமுகவில் இருந்போது நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில், திமுகவில் சேர்ந்தபிறகே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாம் குற்றம் செய்தேனா, இல்லையா என்பது குறித்து விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அமலாக்கத்துறை, “வருமானவரி கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தவறு செய்யவில்லை என்றில்லை. விசாரணையில்தான் அது தெரியவரும். வேலை வேண்டும் என பணம் கொடுப்பவர்கள் வங்கி மூலம் பணம் கொடுக்கமாட்டார்கள். அமலாக்கத்துறை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வேண்டும் என கோர முடியாது. செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராகத்தான் இருக்கிறார். சமூகத்தில் சக்திவாய்ந்த நபராக உள்ளார். எனவே, சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. ஜாமீன் கோருவதற்கு உடலநிலை ஒரு காரணம் அல்ல. அமலாக்கத்துறை பதிவு்செய்த வழக்கில் இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களும் உள்ளனர்” என வாதம் வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது வரும் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக உத்தரவிட்டார். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு வரும் செப்டம்பர் 29ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6வது முறையாக செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.