மாணவர்களுக்காக சிறப்பு பயிற்சி மையம்: செங்கோட்டையன்
மத்திய அரசின் போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில், வருகிற 13ஆம் தேதி அரசு சிறப்பு பயிற்சி மையங்கள் தொடங்கவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு சி.எஸ்.ஐ பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்படும் அனைத்து போட்டி தேர்வுகளையும் மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், தமிழக அரசு சார்பில் சிறப்பு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
இதற்காக ஸ்பீடு என்ற நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் வருகிற 13ஆம் தேதி பயிற்சி மையங்கள் தொடங்கவுள்ளதாகவும் கூறினார். இந்த திட்டத்தில் முதற்கட்டமாக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள 73 ஆயிரம் மாணவர்கள் பயனடைய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனுடன் மாணவர்களுக்கு உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய வசதியாக உதவி மையங்கள் தொடங்குவதற்கு முதல்வருடன் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அத்திட்டம் நடைமுறைபடுத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.