8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வா?: அமைச்சர் விளக்கம்
8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தாலும், இவ்விஷயத்தில் மாநில அரசுகள் விருப்பம் போல முடிவெடுத்துக் கொள்ள சுதந்திரம் அளித்திருந்தது. ஆனாலும், பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளிட்ட 23 மாநிலங்கள் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளன.
இதனிடையே, தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். அதேபோல் கட்டாயத் தேர்ச்சி அளிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி வெறும் வதந்திதான் என்றும் செங்கோட்டையன் கூறினார். மேலும், “புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டுத் துறையை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமய கல்வி வழங்கப்படும்” என்றார்.