“இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள்” - அமைச்சர் சேகர்பாபு!

“தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,648 கோயில்களில் திருப்பணிகளுக்காக 5,907 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டப்பேரவை
அமைச்சர் சேகர்பாபுதமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கைகளுக்கு பதிலுரை அளித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,648 கோயில்களுக்கு திருப்பணிகளுக்காக 5,907 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். தமிழ்நாட்டில், ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்” எனக்கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு பிறகு அமைச்சர் சேகர் பாபு அளித்த பதில் உரையில்,

“தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பாக கடந்த அதிமுக ஆட்சி பத்தாண்டுகளில் வெறும் 3,800 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளில் 6,000 கோடி ரூபாய் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த 3 ஆண்டுகளில் 7,648 கோயில்களின் திருப்பணிகளுக்காக 5,907 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

3 ஆண்டுகளில் 1,810 திருகோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது.

இந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த சிலைகள், பொருட்கள் உள்ளிட்ட 4,800 இனங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 74 மரத்தேர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்து மரத்தேர்களும் வீதி உலா வரும்.

தமிழகத்தில் உள்ள 9 திருக்கோயில்களில் 3 வேலை அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1.24 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

Minister Shekhar Babu
Minister Shekhar Babu file

720 கோவில்களில் ‘ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தின்’ கீழ் 2.11 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு 928 கோடியை அரசு மானியமாக முதல்வர் வழங்கி உள்ளார். இதன் மூலம் ராஜராஜ சோழனின் வரிசையில் முதலமைச்சரின் பெயரும் இடம்பெறும்.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் திருக்கோயில்கள் அதிகம் உள்ளன. அதற்கு காரணம் நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை.

சட்டப்பேரவை
"ஆய்வு செய்ய மூன்று வருடமா?" அமைச்சரை நோக்கி துரைமுருகன் கேள்வி!

எந்த மதமாக இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோயில் வைத்து வணங்கலாம், பிரசாரத்திற்கு அழைத்து வராதீர்கள். இறைவனிடம் வரம் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள்.

உலகத்திற்கே பொது மறையும், பொது நீதியும் வழங்கிய அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும்.

மனித நேயம் ஒருபோதும் இம்மண்ணை விட்டு அகலாது. அறநிலையத்துறையே இருக்காது என்றவர்களின் எந்த அதிகாரமும் இங்கு செல்லாது. நதிகள் முன்னேதான் செல்லும், பின் வந்ததில்லை. அதுபோல முதலமைச்சர் லட்சியத்தின் முன் வைத்த காலை பின் வைப்பதில்லை.” என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com