கடும் சொற்களால் விஜயை மறைமுகமாக சாடிய அமைச்சர் சேகர்பாபு! என்ன நடந்தது?
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூல், நேற்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டே பெற்றுக்கொண்டார். இரண்டாவது பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார்.
இதில் பேசிய விஜய், கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்போடு ‘200 வெல்வோம்’ என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு... என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை. நீங்கள் உங்களோட சுயநலத்துக்காக பல வழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள்” என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், கடும் சொற்கள் மூலம், அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக விஜயை சாடியுள்ளார். அதில், “வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல 234 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக்கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கைப்பற்றும்.
வில்லிலிருந்து புறப்படும் அம்பாக... திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு எப்பொழுதெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் ஏற்படுகின்றதோ;அப்பொழுதெல்லாம், 80 கிமீ வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிற திராவிட கழக தொண்டன் 100 கிமீ வேகத்தில் பயணிப்பான். வருகின்ற 2026 ஆம் ஆண்டு எங்கள் உயிரினும் மேலான திராவிட முன்னேற்றக்கழகத்தலைவரை அரியணையில் ஏற்றுவரை எங்களுடைய பயணம் எங்களுடைய வேகம் குறையாது.”என்று தெரிவித்துள்ளார்.
இந்தவகையில், விஜய் பேசிவிட்டு சென்றுள்ளது தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.