உண்டியலில் விழுந்த ஐபோன்.. முருகனுக்கே சொந்தம் தானா!? அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன?
கோயில் உண்டியலில் எது விழுந்தாலும், அது கடவுளுக்கே சொந்தம் என பழைய அம்மன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். அப்படிதான், உண்டியலில் காணிக்கை செலுத்தும் போது தவறுதலாக உள்ளே விழுந்த ஐ போன், தற்போது முருகனுக்கே சொந்தம் என கூறுகிறார்கள் திருப்போரூர் கோயில் நிர்வாகிகள்.
என்ன நடந்தது?
சென்னை சிஎம்டிஏ ஊழியரான தினேஷ் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி குடும்பத்தோடு திருப்போரூர் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். என்னோட எல்லா பிரச்னையையும் தீர்த்து வைப்பா முருகானு உண்டியலில் காணிக்கை செலுத்தும் போது, அவர் வைத்திருந்த ஐபோனும் தவறுதலாக உள்ளே விழுந்துள்ளது.
இது என்னப்பா புது பிரச்னைனு உடனே அது குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்க, உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் போது தகவல் கொடுக்கிறோம், அப்போது வந்து போனை பெற்றுக் கொள்ளுங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
போனைதிரும்ப வாங்க வந்தவருக்கு காத்திருந்த
3 மாதங்களுக்கு பிறகு, உண்டியல் திறந்து காணிக்கையை எண்ணும் போது தினேஷின் ஐபோனும் இருந்துள்ளது. அவருக்கு கோயில் நிர்வாகிகள் தகவல் கொடுக்க, 3 மாதங்களுக்கு பிறகு ஐ-போன் கிடைத்துவிடும் என உற்சாகமாக கோயிலுக்கு வந்தவருக்கு காத்திருந்தது மிகப்பெரிய டிவிஸ்ட்..
“எங்கே என் போன் சீக்கிரம் கொடுங்க” என கேட்டவருக்கு, “போன் கொடுக்க உங்கள கூப்டல, அதுல இருக்க டேட்டாவ மட்டும் எடுத்துட்டு போங்க, உண்டியல்ல விழுந்த எல்லாமே அப்பன் முருகனுக்குதான் சொந்தம்னு” கோயில் நிர்வாகிகள் விபூதி கொடுத்துள்ளனர்.
சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் தனது நிலையை விரிவா எடுத்துக்கூறி மனு அளித்துள்ள தினேஷ், எப்படியாவது ஐபோனை மீட்டு கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த ஐபோன் கிடைக்குமா? இல்லையா என்பது திருப்போரூர் முருகனுக்கே வெளிச்சம்.
அமைச்சர் சேகர்பாபு சொன்னது என்ன?
உண்டியலில் ஐபோன் விழுந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “எப்போதும் உண்டியலில் விழுந்துவிட்டால் அதை சாமி கணக்கில் தான் வரவு வைப்பார்கள். இதற்கு ஏதாவது விதிவிலக்கு சட்டத்தில் இருந்தால், அதை ஆராய்ந்து அந்த பக்தருக்கு நிவாரணம் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.