நெல் கொள்முதல் விவகாரம் | பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதில்!
நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தெரிவித்திருந்த கருத்துக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
”விவசாயிகள் சாலையில் நெல்லை குவித்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அமைச்சர் சக்கரபாணி கூறியதுபோல் 2,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. தினமும் 2,000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், எந்த கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகள் தேங்கி இருக்காது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு முதலமைச்சர் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை. திமுக ஆட்சியின்தான் ஆண்டுக்கு 42 லட்சம் டன் நெல் கொள்முதல் என கூறுவது பச்சைப் பொய். தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் நெல் கொள்முதல் குறித்து முரணான தகவல் கூறப்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதேபோல், நெல் சரக்குந்து ஒப்பந்தத்தில் 165 கோடி ரூபாய் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை கிடங்குகள் மற்றும் அரவைக்கு சரக்குந்துகள் மூலம் கொண்டு செல்ல கடந்த நிதி ஆண்டில் 3ஆயிரத்து 200 சரக்குந்துகள் ஈடுபட்டதாக கூறியுள்ளார். ஒவ்வொரு சரக்குந்துக்கும் வாடகையை விட 321 சதவிகிதம் கூடுதல் தொகை 3 நிறுவனங்களுக்கு தரப்பட்டதன் மூலம் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் கே.பழனிசாமி, அரைத்த மாவையே அரைத்து உண்மையை மறைப்பதாக, அமைச்சர் சக்கரபாணி விமர்சித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடர் கொள்கை விளக்கக்குறிப்பில், மார்ச் 31வரை நடைபெற்ற கொள்முதல் விவரம் மட்டுமே குறிப்பிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த சாதாரண விஷயத்தைக்கூட புரிந்துகொள்ளாமல், எதிர்க்கட்சி தலைவர் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசி வருவதாக சாடியுள்ளார்.
திமுக ஆட்சியில் 1.96 கோடி மெட்ரிக் டன்நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சக்கரபாணி, தமிழ்நாட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் ஓர் இயந்திரத்திற்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல்செய்யலாம் என ஆணை பிறப்பித்து, சில இடங்களில் மூவாயிரம் மூட்டைகள் வரையிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பான அன்புமணி ராமதாஸின் புகார்களையும், சக்கரபாணி மறுத்துள்ளார்.

