அமைச்சர் மனைவியிடம் வருமான வரித்துறை தொடர் விசாரணை
வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம், எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகார் எதிரொலியாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 7 ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக அவரிடம் 10 மற்றும் 17ஆம் தேதிகளில் பத்து மணி நேரத்திற்கும் மேலாக புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்துவதற்காக, வருமாவரித் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று காலை 8.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் 10.30 மணி முதல் அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
விஜயபாஸ்கரின் தொழில் நிறுவனங்கள், வங்கிக் கணக்குகள், பணப் பறிமாற்றம் போன்றவற்றை ரம்யா கையாளுவதால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. அண்மையில் தொடங்கப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கான முதலீடு குறித்தும், வரி ஏய்ப்பு தொடர்பாகவும், ஏற்கனவே விசாரணையின் போது விஜயபாஸ்கர் தெரிவித்த தகவல்கள் பற்றியும் ரம்யாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.