அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
அதிமுக ஆட்சிக் காலத்தில் கிராமப்புற பகுதியில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளை மீண்டும் இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்களுக்கு நடைபெற இருக்கிறது. இதில் திமுக சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ''அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா தொற்றால் சுமார் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கிராமப்புற பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகளை விரைவில் இயக்க அரசு திட்டமிட்டு உள்ளோம். இதேபோன்று தமிழக அரசுக்கு தேவை கூடிய புதிய பேருந்துகளை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் கிராமப்புற மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய எப்பொழுதும் தயாராக இருப்பார். கிராமத்தில் மருத்துவமனை அமைத்து தர மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் பேசி வாங்கி தருகிறேன்'' gi ராஜகண்ணப்பன் வாக்குறுதி அளித்தார்.