'உதயநிதி ஸ்டாலின் அமைச்சாரகும் காலம் விரைவில் வரும்' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

'உதயநிதி ஸ்டாலின் அமைச்சாரகும் காலம் விரைவில் வரும்' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு
'உதயநிதி ஸ்டாலின் அமைச்சாரகும் காலம் விரைவில் வரும்' - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு

“விரைவில் ஏழை எளிய மக்களுடைய துயரத்தை தொடைக்க கூடிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பாரம்பரிய சிலம்பம் போட்டி இன்று நடைபெற்றது. வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்பம் போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்க வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரிசுகளை வழங்கினார்.

இந்தப் போட்டியில் ஒற்றைக் கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வால் வீச்சு சுருள்வால்வீச்சு, சக்கரபானம், வேல் கம்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இந்த போட்டிகள் முடிவில் சிலம்பாட்ட வீரர்கள் நெருப்பில் சாகசம் நிகழ்த்தியது அனைவரையும் வியக்க வைத்தது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரிசுகளை வழங்கினார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வலுத்தூக்கும் வீராங்கனை லோகப்பிரியா பங்கேற்ற நிலையில் அவர் வெற்றி பெற்று இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்ததை எடுத்து கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி லோகப்பிரியாவை பாராட்டி பத்தாயிரம் ரூபாயும் அதே போல் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியனும் பத்தாயிரம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், ''தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தபடி தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப விளையாட்டை தேசிய அளவில் கொண்டு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி சிலம்பம் பயிற்சி பெறும் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என  சொன்னதை, மூன்றே மாதத்தில் நிறைவேற்றி அரசு வேலை வழங்குவதற்கான உத்தரவையும் பிறப்பித்தவர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இதனை விட முக்கியமானதாக இந்த ஆண்டு சிலம்ப கலையை பயிற்றுவிக்கும் 100 ஆசான்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதி உதவியும் அளித்து சிலம்ப பயிற்சியாளர்களையும் கௌரவித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிலம்ப கலை உடலுக்கு ஆரோக்கியமானது இன்றைய இளைஞர்கள் விடுமுறை நாட்களில் செல்போன்களின் மூழ்கி விடாமல் இது போன்ற வீர விளையாட்டான சிலம்ப கலையை கற்பது உடலுக்கு வலு சேர்க்கும்'' என்று பேசினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''உதயநிதி ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்த மரியாதை தான் திமுக இளைஞரணி செயலாளர் பதவி. பின்னர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இன்று மீண்டும் இரண்டாவது முறையாக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பினை ஏற்றுள்ளார். இதோடு இல்லாமல் விரைவில் நிச்சயமாக கோட்டையில் ஒரு அமைச்சராக அமர்ந்து தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுடைய துயரத்தை தொடைக்க கூடிய அமைச்சராக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கூடிய அமைச்சராக நிச்சயமாக இருப்பார். அந்த காலம் விரைவிலே வரும் என்று நிச்சயமாக அனைவரும் நம்புவோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு தான் விளையாட்டுத்துறைக்கு 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பத்திற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அரசாணையைத் தந்தார் . சிலம்பாட்ட கலையை வளர்த்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். சிலம்பாட்டக் கலைக்காக புத்துயிரைக் கொடுத்துள்ளார்'' என்று தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com