PTR, Udhay
PTR, UdhayRepresentational Image

“இப்படிப்பட்ட செயல்வீரரை பற்றி நான் எப்படி தவறாகப் பேசுவேன்?” - ஆடியோ சர்ச்சையும் PTR-ன் விளக்கமும்!

ஆடியோ சர்ச்சைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் விதமாகவும், வெளியான ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

‘மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் ஒரு புறம் காலை கடிக்க, கட்சி சார்ந்த சில பூசல்கள் கழுத்தையே நெரிக்கிறது’ என்ற சூழல் இருக்கிறது தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு.

12 மணிநேர வேலை, திருமண நிகழ்வுகள் - விளையாட்டு மைதானங்களில் மதுபானத்துக்கு அனுமதி, நீர் நிலைகளை ஒருங்கிணைக்க தனியாருக்கு ஆதரவான மசோதா என அடுத்தடுத்து ராஜாங்க ரீதியான பிறழ்வுகள் திமுகவின் அரசுக்கு நெருக்கடியாக இருக்கும் வேளையில், ‘கட்சியில் இருந்தே ஒரு அபயக்குரல் எழுந்திருக்கிறது’ என்ற பேரில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ க்ளிப்பிங் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி திமுகவுக்கு பேரிடியாக விழுந்தது.

அந்த ஆடியோவில் குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் மு.க.ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதியும், மருமகனான சபரீசனும் இணைந்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து விட்டதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இருந்தது. அந்த ஆடியோ பட்டித்தொட்டியொங்கும் பரவியதோடு அதை ஒரு ட்ரம்ப் கார்டாகவே அதிமுகவும் பாஜகவும் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள்.

முதல் ஆடியோ வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் அண்மையில் பிடிஆர் பேசியதாகச் சொல்லி நேற்று மீண்டுமொரு ஆடியோ வெளியானது.

இந்த நிலையில், ஆடியோ சர்ச்சைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் விதமாகவும், வெளியான ஆடியோக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதோடு, தன்னிலை விளக்கமாக வீடியோவிலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேசியிருக்கிறார்.

அதில், “AI வசதி மூலம் வீடியோக்களையே போலியாக உருவாக்கும் போது ஆடியோக்கள் எம்மாத்திரம்?” எனக் குறிப்பிடும் வகையில் அதற்கான சில யூடியூப் வீடியோக்களை இணைத்துள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தான் பேசியதாக வெளியான ஆடியோ பதிவுகள் போலியானவை என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், “சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ க்ளிப்பில் உள்ள எந்த செய்தியையும், எந்தவொரு தனி நபரிடமும் தொலைபேசி உரையாடலிலோ தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை” என்று குறிப்பிட்டுள்ள பிடிஆர், “பாஜக மாநில தலைவர், யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்” என்றும் சாடியுள்ளார்.

இதுபோக, “மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சி என அழைக்கும் இத்தகையக உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இது கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு செய்தவற்றைவிட மகத்தான சாதனையாகும்.

இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.” என்றிருக்கிறார் அமைச்சர் பிடிஆர்.

@ptrmadurai, twitter

இதனையடுத்து, “தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எங்கள் நம்பிக்கை நட்சத்திரமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள், மக்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப் பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன்.

அனைவரது எதிர்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி செயல்பட்டு வருகிறார். முதல்வரை போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்?

நான் அரசியலுக்கு வந்ததுமுதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி, சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

இவர்களிடமிருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இதுபோன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தொடங்கிய காலத்திலிருந்தே ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்” என இறுதியாக குறிப்பிட்டிருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com