'ஓசி' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி!

'ஓசி' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி!
'ஓசி' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக வேப்பேரி பெரியார் திடலில் திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், துணை பொதுச்செயலார் பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும். ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து கொண்டு அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.

பெண்களுக்கு முன்னேற்றத்தை கொடுத்தது திமுக. இது தான் திராவிட மாடல். தலைவராக பொறுப்பேற்றதற்கு பட்டாபிஷேகம் என எழுதுகின்றனர். ஆனால் அவர் உழைப்பு கிடைத்த அங்கீகாரம், அவருக்கு தான் தலைவர் ஆவதற்கு தகுதி உள்ளது. ஆட்சியில் மக்களின் நலன் சார்ந்த சிந்தனையில் இருப்பவர் முதலமைச்சர். அவர் படுத்துக்கொண்டு தூக்கம் வரவில்லை என பேசிய போது நான் சிரித்து கொண்டு இருந்தேன் என போடுகிறார்கள்.

சட்டத்தின் முன் மட்டுமல்ல, நமது கண் முன்னும் அனைவரும் சமம் என்பதை சொல்வதும், சமூக நீதியை காப்பதும் தான் திராவிடம். கடந்த 10 ஆண்டுகளில் 4000 பேர் மட்டும் தான் கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் ஒரே வருடத்தில் 4000 நபர்களை TRB மூலம் தேர்வு செய்து தமிழக முதல்வர் சாதனை செய்துள்ளார்” என்று பேசினார்.

இதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, “மனுதர்மம் குறித்த கேள்விகளுக்கே படாதபாடு படும் உங்களிடம் ராமனின் செருப்பை அரியணையில் வைத்து ஆட்சி செய்ததைப் பற்றி பேசினால் என்ன ஆவீர்கள்? மறந்து விட்ட TR பாலுவின் செருப்பை ஒரு மனிதாபிமானத்துடன் கொண்டு வந்து கொடுத்ததைப் பற்றி பேச, செருப்பை தூக்கி வைத்து ஆட்சி நடத்திய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

ஒரு கட்சித் தலைவர் என்ற கடமையையும் பொறுப்பை உணர்ந்தா பேசுகிறார் அண்ணாமலை? மிசாவில் ஸ்டாலின் சிறை செல்வில்லை என்று கூறுகிறார். தற்குறிகள் இப்படிப் பேசினால் பரவாயில்லை. இவர் பெயருக்குப் பின் ஐபிஎஸ் வேறு இருக்கிறதே. மிசா குறித்த இஸ்மாயில் கமிஷனின் அறிக்கைக்கும், மேயர் சிட்டி பாபுவின் டைரிக்கும் என்ன பதில் சொல்கிறார்? ஆதாரத்தோடு மட்டுமே பேசுவது திகவினரின் பழக்கம். கவர்னர்கள் இருக்கலாம். ஆட்சி அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்.” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com