பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் எந்தத் துறையாலும் பராமரிக்கப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் எந்தத் துறையாலும் பராமரிக்கப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் எந்தத் துறையாலும் பராமரிக்கப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

நீண்டகாலமாக பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் எந்தத் துறையாலும் பராமரிக்கப்படாமல் அனாதையாக காணப்பட்டது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

பண்டைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக விளங்கிய பத்மநாபபுரம் அரண்மனையை ஒட்டிய பகுதியில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த கோட்டைச்சுவர் காணப்படுகிறது. இந்த கோட்டைச்சுவர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக கேட்பாரின்றி அனாதையாக காணப்படுகிறது. கோட்டைச் சுவரின் பல்வேறு பகுதிகள் சிறிது சிறிதாக சிதிலமடைந்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து இன்று தமிழக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கோட்டைச்சுவர் சரிந்து விழுந்த பகுதியை பார்வையிட்டனர்.

பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீண்டகாலமாக கோட்டைச்சுவர் அனாதையாக காணப்பட்ட நிலையில், இது தொடர்பாக கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது தெளிவுபடுத்தப்படவில்லை எனவும், பொதுப்பணி துறையா அல்லது தொல்லியல் துறையா என்ற குழப்பமான நிலையே காணப்பட்டதாகவும் கூறினார். தற்போது இது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கோட்டைச்சுவரை புனரமைத்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சியில் அதிகாரிகளிடையே லஞ்சம் தலைவிரித்தாடிய நிலையில், ஆட்சியாளர்கள் அவற்றை கண்டுகொள்ளவில்லை எனவும், தற்போது லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கைது செய்யப்படுவது, தண்டனைக்கு உட்படுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளே காரணம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படவில்லை எனவும், அப்போது குளங்களில் தூர்வாருதல் பணிகளில் நடைபெற்ற முறைகேடு மீது நடவடிக்கை எடுப்பதற்கு, நீதிமன்றம் சென்று வழிகாட்டுதல் பெற்றுத்தான் வழக்குப்பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், தற்போது அந்த நிலைமாறி பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சியோடுதான் தற்போதைய அரசு ஆன்லைன் மூலமாக அரசு சேவைகளை வழங்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com