“திருவள்ளுவரும் ஒரு நெசவாளி என்பதில் பெருமை கொள்வோம்” - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

பல சவால்களுக்கு மத்தியிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜவுளி துறையில் 55 சதவீத வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளார்
அமைச்சர் பியூஷ் கோயல் -ஜவுளி துறை
அமைச்சர் பியூஷ் கோயல் -ஜவுளி துறைமுகநூல்

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழா மற்றும் ஆசிய அளவிலான ஜவுளித் துறை கருத்தரங்கம், கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் 2 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ஜவுளித் துறையில் ஆசிய அளவில் சிறந்து விளங்கும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்.

அமைச்சர் பியூஷ் கோயல்
அமைச்சர் பியூஷ் கோயல்

மேலும் மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஸ், தமிழ்நாடு கைத்தறி துறை அமைச்சர் காந்தி, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு ஜவுளித்துறை அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

“திருப்பூரின் ஏற்றுமதி பங்கு மட்டும் ரூ.35,000 கோடி!”

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டாக இருந்தாலும், நாட்டில் ஜவுளி ஏற்றுமதி 500 பில்லியன் டாலரில் இருந்து 776 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் ஜவுளி துறையில் இரண்டு ஆண்டுகளில் 55 சதவீத வளர்ச்சியை இந்தியா கண்டுள்ளது. இதற்காக ஜவுளித்துறை சார்ந்த நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா பரவல், ரஷ்யா உக்ரைன் போர் போன்ற பிரச்னைகள் இருந்தாலும், இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரித்தே இருந்தது. அதில் தமிழகத்தில் உள்ள திருப்பூர் நகரின் ஏற்றுமதி பங்கு மட்டுமே 35 ஆயிரம் கோடியாக உள்ளது.

திருப்பூர்
திருப்பூர்

இந்திய ஜவுளித் துறையில் தமிழ்நாடு மிக முக்கிய பங்களிப்பு செய்கிறது. இந்தியாவின் ஜவுளித்துறை பொருளாதாரத்தில் தமிழகம் மட்டுமே 30 சதவீதம் பங்கு வகிக்கின்றது. அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில், இந்தியா தனது நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, இந்தியாவின் ஜவுளி பொருளாதாரம் 35 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டும்.”

“திருவள்ளுவரும் ஒரு நெசவாளி”

“பிரதமர் அவர்கள் இந்தியாவில் அரசியல் நிலைதன்மையை கொண்டு வந்துள்ளார். மேலும் மிக முக்கியமாக ஊழலற்ற அரசாங்கத்தை மக்களுக்கு வழங்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற தமிழ்ப்புலவர் திருவள்ளுவரும் ஒரு நெசவாளி என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். தமிழக கலாச்சாரம் நமக்கு கற்றுக்கொடுப்பது ஏராளம்.

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

இந்த மாநிலம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மாநிலமாக உள்ளது. அனைத்து துறையையும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.

சந்திரயான் 3 வெற்றி...

மனித வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையாக சந்திராயன்-3 வெற்றி அமைந்துள்ளது. அடுத்ததாக சூரியனை நாம் ஆய்வு செய்ய இருக்கிறோம். இவை எல்லாம் உலக அளவில் நமக்கு பெருமையை தந்துள்ளது.

சந்திரயான் 3
சந்திரயான் 3

இந்தியா, மிகப்பெரிய ஜவுளி துறையின் மையம்!

இந்தியாவின் ஜவுளி சந்தை மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி சந்தையை ஊக்குவிக்கும் விதமாக மிகவும் தரமான உதிரி பாகங்கள் ஏற்றுமதி செய்வதற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுவிட்ச்லாந்து, நார்வே போன்றவை உதிரிபாகங்களில் அதிகளவு முதலீடுகள் செய்யும் நாடுகளாகும். அதனை இந்திய தொழிற் துறையினர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்தியா மிகப்பெரிய ஜவுளி துறையின் மையமாகவும் உள்ளது.

பிரதமர் 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என சொல்வதை மெய்ப்பிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காலனித்துவ எண்ணத்தை அழித்து, நம் கலாச்சாரம், பாரம்பரியத்தின் மகிமையை உணர வேண்டும். ஒரே குடும்பம் என்ற எண்ணம் கொண்டு வளர்ச்சியை, நிலையான வளத்தை ஏற்படுத்த வேண்டும்”

“இந்தியா இழந்த புகழை மீட்டெடுத்து, மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும்”

“140 கோடி மக்கள் ஜி 20 மாநாட்டை கொண்டாடுகின்றனர். மூலைமுடுக்கெல்லாம் ஜி 20 மாநாடு குறித்து எடுத்து சென்றுள்ளோம்.

உலக தலைவர்கள் பிரதமர் மோடியை அன்புமிக்க, பிரபலமான, தலைவராக பார்க்கிறார்கள். பிரதமர் மோடி அந்த அங்கீகாரத்தை இந்தியாவின் 140 கோடி மக்களுக்கானது என்று சொல்லியுள்ளார். நமது கடமையை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்தியா இழந்த புகழை மீட்டெடுத்து, மிகப்பெரிய சக்தியாக மாற்ற வேண்டும். 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு ஆகும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com