மின்வெட்டு அல்ல; ஜெனரேட்டர் பிரச்னை தான் - நிர்மல்குமார் விளக்கம்!!
தவெக அரசு அமைந்ததிருலிருந்தே தமிழ்நாட்டில் மின்தடை பிரச்னை தொடர்ச்சியாக பேசுபொருளாகி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வந்ததுடன், ஒருசில இடங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் தான், சமீபத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற ஒரு கூட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்த போதே, மின் தடை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின் தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தான், இன்று மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பங்கேற்ற கல்லூரி நிகழ்வு ஒன்றில் மின் தடை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதைத் தொடர்ந்து, ”த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை” என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருந்தார். தொடர்ந்து, மின்தடை குறித்து வெளியான செய்திகளையும் பகிர்ந்திருந்தார்.
இந்தச்சூழலில் தான், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் தனது கூட்டத்தில் நடைபெற்றது மின்தடை இல்லை எனவும் ஜெனரேட்டர் பிரச்னை மட்டுமே எனவும் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு கண்மாய்களில் மொத்தமாக 25,000 பண விதைகள் நடும் நிகழ்ச்சியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், மின்தடை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்துப் பேசியுள்ள அவர், ”அமைச்சர் ஆதவ் அர்ஜுன் அவர்கள் நிகழ்ச்சியில் ஜெனரேட்டர் தான் பிரச்சனை, இன்றைய நிகழ்ச்சியில் கூட ஜெனரேட்டர் தான் பிரச்சனை. இரண்டு ஜெனரேட்டர் இருந்தது ஒன்றுலிருந்து இன்னொன்று மாற்றும்போது ஏற்பட்டது. தவறான தகவல்கள் பல இடத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். மின்சாரம் பற்றாக்குறை இருந்தது அதற்கு சரி செய்வதற்காக வெளியே இருந்து வாங்கி உள்ளோம். திமுகவுக்கு வீரமணி போன்ற பாலியல் வன்கொடுமைகளை அந்த வழக்கை திசை மாற்றம் வேலையாக எங்கு பார்த்தாலும் மின்வெட்டு பிரச்சனை என உள்ளது என்ன சொல்கிறார்கள். இன்று காலை நிகழ்ச்சியில் 4 செகண்டில் வந்துவிட்டது.” எனத் தெரிவித்துள்ளார்.

