\
அமைச்சர் நிர்மல்குமார்
அமைச்சர் நிர்மல்குமார்pt

"பாஜக உதவியுடன் தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.." முஸ்தபாவைத் தொடர்ந்து நிர்மல்குமார் புகார்!

தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக உதவியுடன் சதி நடப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
Published on: 
Summary

தவெக எம்.எல். ஏக்களை விலைக்குவாங்கி, பாஜக ஆதரவுடன் திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர், ஸ்டாலினும், உதயநிதியும் தவெக ஆட்சியை கவிழ்க்கும் வேலையை முடுக்கிவிட்டுள்ளதாக சாடினார்.

இதுகுறித்து பேசியிருக்கும் அவர், தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து, ஏற்கெனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்., கரூரைச் சேர்ந்த நபரை கைது செய்திருக்கிறார்கள். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஒரு இடத்தில் மட்டுமல்ல; அனைத்து இடத்திலும் முயற்சி நடக்கிறது.

தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜகவின் பின்புலத்தோடு, பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது.

இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நிறுத்துவதாகதான் திட்டம். ஆனால், திமுகவுக்குள் கனிமொழி மற்றும் நேரு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அது கைவிடப்பட்டது.

அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கிறார்கள். அதிலும், உள்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர் நிறுத்தப்படலாம்.

திமுக, அதிமுக சேர்ந்து எப்படியாவது தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வேண்டும் என்ற முயற்சி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளிலிருந்தே தொடர்கிறது.

எங்களுக்கு விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை, எதிலும் சமரசம் செய்ய வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், திமுகவினர் தொடர்ந்து இந்த முயற்சியை செய்து கொண்டே இருக்கிறார்கள்” என பேசியுள்ளார்.

அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு..

அமைச்சர் நிர்மல் குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் நிர்மல்குமார் ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக விமர்சித்துள்ள அவர், இயல் இசை நாடக மன்றத் தலைவர் நியமனத்திற்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் கூறியவரே அமைச்சர் நிர்மல்குமார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 மற்றும் ரூ.41-க்கு வாங்க ஒப்பந்தம் போட்டவர் அமைச்சர் நிர்மல்குமார் என்றும், கேரள அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.12.50-க்கு வாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளைத் திசைதிருப்புவதற்காக அதிமுகவின் பெயரைத் தேவையின்றி இழுத்துப் பேசுவதை அமைச்சர் நிர்மல்குமாரும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனநாயக ரீதியில் மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வர அதிமுகவுக்குத் தெரியும் என்றும், குறுக்குவழியில் ஆதாயம் தேட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அரசியல் நாடகம் நடத்துவதைத் தவிர்த்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசினால் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.