பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தலின் போது, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக நத்தம் விஸ்வநாதனிடம் 2 கோடியே 97 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகையை திரும்ப அளிக்காமல், நத்தம் விஸ்வநாதன் மோசடி செய்து விட்டதாக, திண்டுக்கல் ஒன்றிய அதிமுக இளைஞரணி செயலாளர் ஏ.சபாபதி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முறையிட்டு, நத்தம் விஸ்வநாதன் முன் ஜாமீன் கோரியிருந்தார். வாரத்தில் ஒருநாள் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நத்தம் விஸ்வநாதனுக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.