”அம்மா உணவகத்தை வைத்து அரசியலாக்குகிறார்கள்” - EPS, வேலுமணி கேள்விக்கு அடுத்தடுத்து பதிலளித்த முதல்வரும் அமைச்சரும்!

அம்மா உணவக செயல்பாடு குறித்து சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் கே.என்.நேருவும் விளக்கமளித்திருக்கிறார்கள்.
அம்மா உணவகம்
அம்மா உணவகம்Screenshot

தமிழக சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக கொறடா எஸ்பி.வேலுமணி, ”அம்மா உணவகம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மூடப்பட்டு வருவதாகவும் செயல்படும் உணவகங்களில் உணவு தரமாக இல்லை” என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு, “அம்மா உணவகத்தை மூடும் எண்ணம் எங்கள் அரசுக்கு இல்லை. அம்மா உணவகம் ஒரு இடத்தில் கூட மூடப்படவில்லை. இதை தினமும் அரசியலாக்கி வருகின்றனர்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிசட்டப்பேரவை

இதைத் தொடர்ந்து ”அம்மா உணவகத்தில் உணவு தரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு தினந்தோறும் வருகிறது” என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர், ”உணவு தரமாக இல்லை என்று ஏதேனும் ஒரு இடத்தை குறிப்பிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் இதை திட்டமிட்டு பரப்புகின்றன” என தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்சட்டப்பேரவை

”உணவு தரமாக இருக்கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. அதனை அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவத்தார். தொடர்ந்து ”அம்மா உணவகம் செயல்படவும், தரமான உணவு வழங்கவும் போதுமான நிதி ஒதுக்குவதில்லை” என எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

கே.என்.நேரு, எஸ்.பி.வேலுமணி
கே.என்.நேரு, எஸ்.பி.வேலுமணி

இதற்கு பதிலளித்த அமைச்சர் கேஎன்.நேரு, கடந்த ஆட்சியை விட அதிகமாகவே நிதி ஒதுக்கி வருகிறோம் என்றும், அம்மா உணவகத்திற்கு 129.85 கோடி ரூபாய் நிதியை சென்னை மாநகராட்சியில் ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் என்பது 15 கோடி என்றாலும், நிதி ஒதுக்கீடு 129 கோடியாகும் என்றார். இந்த வருடம் நிதி ஒதுக்கியது சரி, கடந்த வருடம் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என எஸ்.பி.வேலுமணி கேட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com