” 'ஜனநாயகன்' பட விவாகரத்திற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” - அமைச்சர் கே.என் நேரு!
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவருகிறது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்திற்கு U/A சான்றிதழையும் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் தற்போதுவரை தணிக்கைச் சான்று தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது..
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும், ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில்தான், ’ஜனநாயகன்’ படம் நாளை (ஜனவரி 9) வெளியாகாது என ஜனநாயகன் படத் தரப்பிலிருந்து நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஜனநாயகன் வெளியீட்டில் திமுகவின் சதி செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என் நேரு, ” ‘ஜனநாயகன் பட விவகாரத்திற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம், “தணிக்கைக் குழு என்பது மத்திய அரசிடமே இருக்கிறது. அப்படியிருக்கும்போது ’ஜனநாயகன்’ படத்திற்கு திமுக எப்படி தடையாக இருக்க முடியும். ’ஜனநாயகன்’ படத்திற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

