மொபைல் ஆப் மூலம் பதிவேற்றப்பட்டதால் தான் ஸ்மார்ட் கார்டுகளில் குளறுபடி: அமைச்சர் காமராஜ்
மொபைல் ஆப் மூலம் ஸ்மார்ட் கார்டு விவரங்கள் சேகரிக்கும் போது, புகைப்படங்கள் தவறுதலாக பதிவேற்றப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டில் பயனாளர்களின் புகைப்படங்களுக்கு பதில் காஜல் அகர்வால், விநாயகர் படம் என படங்கள் அச்சிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தவறுக்கு காரணமானவர்களை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவ்வகையான தவறு மேலும் நடைபெறாதவாறு அச்சடிக்கும் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். ஜெயலலிதாவின் கனவு திட்டமான ஸ்மார்ட் கார்டு திட்டம் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் அவர் கூறினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், மொபைல் ஆப் மூலம் பதிவேற்றம் செய்த சிலர் செய்த தவறே இந்த குழப்பத்திற்கு காரணம் என தெரிவித்தார். மேலும் இவ்வகையான தவறு இனி நடைபெறாது எனவும் உறுதியளித்துள்ளார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியவில்லை என்ற ஆதங்கத்தில் அதிமுகவை விமர்சித்து வருவதாகவும் கூறினார்.