புகார் எழுந்தது; சிறப்புக்காட்சியை ரத்து செய்தோம் - விளக்கமளித்த கடம்பூர் ராஜு
பிகில் படத்துக்கு மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தீபாவளியையொட்டி திரையரங்குகளில் எந்தப் படத்துக்கும் இதுவரை சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார். அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் செய்தியாளர்களை அமைச்சர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிகில் படத்துக்கு மட்டுமல்ல எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை
ஊடகங்கள் பிகிலை மட்டும் முன்னிலைப்படுத்துகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. ஆகவேதான் சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
ரசிகர்களும் கூட முதல் காட்சி பார்க்க 2,000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த புகாருக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிறப்பு காட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.