“காலம் முழுவதும் ஸ்டாலின் பொறுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்” - கடம்பூர் ராஜூ பதிலடி
ஸ்டாலின் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “பொறுத்தார் பூமி ஆள்வார். நாம் இப்போது பொறுத்துக்கொண்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார். மேலும், “கூறியபடி மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதலமைச்சர் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார்” எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஒட்டப்பிடாரத்தில் வ.உ.சி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்வி : பொறுத்தார் பூமி ஆள்வார்; நாங்கள் பொறுத்து கொண்டிருக்கிறோம் என்ற ஸ்டாலினின் கருத்து குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : அவர் பொறுத்து கொண்டே இருக்க வேண்டியது தான். அதை தான் மக்களும் விரும்புகின்றனர். காலம் முழுவதும் அவர் பொறுத்திருக்க வேண்டியது தான்.
கேள்வி : முதலீடுகளை கொண்டு வந்தால் திமுக சார்பாக முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என ஸ்டாலின் பேசியதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பதில் : அரசியலுக்காக பேசக்கூடாது. அவர் துணை முதலமைச்சராக இருந்தவர். பாராட்ட மனமில்லை என்றாலும் பரவாயில்லை. விமர்சிக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது மக்களுக்கும் நல்லது.

