நெடுஞ்சாலைப்பணிகளில் முறைகேடு நடைபெறவில்லை - ஜெயக்குமார்
தமிழக அரசின் நெடுஞ்சாலை பணிகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநரை இன்று சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டி மனு அளித்தார். அத்துடன் இந்த முறைகேடுகளில் அமைச்சர்களும் ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஜெயக்குமார், தமிழக அரசின் நெடுஞ்சாலை பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட கோட்டங்களில் நடைபெறும் பணிகள் விளக்கமளித்துள்ள அவர், பொள்ளாச்சி கோட்ட சாலைப் பராமரிப்பு பணியில் முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். அத்துடன் உலக வங்கியின் வழிகாட்டுதலின்படியே, தமிழக நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சாலைப் பராமரிப்பு பணிகளால் அரசு ரூ.527.73 கோடியை சேமித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.