மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் - அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக ஆட்சி கலைந்துவிடும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரி அடுத்த வாணியஞ்சாவடியில் உள்ள தமிழ்நாடு மீன்வளப் பல்கலைகழகத்தில், ஆழ்கடல் மீன்பிடித்தல் பற்றியும் அதனை கையாளும் முறை குறித்தும் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ஆழ்கடலில் மீன்பிடித்தல் குறித்த விளக்கங்கள் அளிக்க தமிழகத்தில் மண்டபம், தூத்துக்குடி, தூத்தூர் ஆகிய மூன்று இடங்களில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ஸ்டாலின் மட்டுமே தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் பொதுமக்களும் திமுகவினரும் கூட தேர்தலை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றும் பதவி வெறி அதிகார வெறி ஸ்டாலினின் போக்காக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.