இந்தியாவிலேயே இல்லாத திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது: ஜெயக்குமார்
இந்தியாவிலேயே இல்லாத வகையில் முதல் முறையாக திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தலைமை செயலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முறை தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம், திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தலைமைச்செயலக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக கூறினார். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 621 பேர் இந்தியக் குடியுரிமைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காசிமேடு பகுதியில் மீனவர்கள் போராட்டம் நடத்தப்பட்டது தனக்கு எதிரான திட்டமிட்ட சதி என்று அவர் குற்றம்சாட்டினார். தன்னைப் பற்றி மீனவ சமுதாய மக்களிடம் தவறான எண்ணத்தை பரப்ப வேண்டும் என எண்ணி அந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கூறினார். அத்துடன் மீனவர்களின் படகுகளில் இருந்த சீனப்படகுகள் குறித்து புகார் வந்தவுடன், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஏழை எளிய மீனவர்களுக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டிக்கொடுத்த மீன் அங்காடியில் சிலர் மாமுல் வசூலிப்பதாகவும், அவ்வாறாக ஒருநாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை ரவுடிகளால் மாமுல் வசூலிக்கப்படுவதாகவும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார். தன்மீது அவதூறு பரப்பவே திமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பைக்குகள் அனைத்தும் திமுகவை சேர்ந்தவர்களின் பைக்குகள் என்று புகைப்படங்களை அவர் காண்பித்தார்.